சென்னை: தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.இதனைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறையில் முறைப்படி முதல்வராக பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிசாமி 5 முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தி முழுமதுவிலக்கை எட்டும் நோக்கில் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அதிமுகவின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் கடந்த ஆண்டு மே மாதத்தில் பதவியேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா, 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். இந்தநிலையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.

Advertisements