சென்னை: தமிழகத்தில் நிலவும் வறட்சியைப் போக்க விரிவான திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.இதனைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறையில் முறைப்படி முதல்வராகப் பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிசாமி 5 முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி கூறும்போது, “தமிழகத்தில் நிலவும் வறட்சியைப் போக்க விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் வறட்சியினால் பாதிக்கப்பட்ட கிராம மற்றும் நகர மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றியதோ அதே வழியில் இவ்வரசும் செயல்படும்.தேர்தல் வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தின் கீழ் உழைக்கும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50% மானியம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் மீனவர்களுக்கான தனி வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 5000 வீடுகள் கட்டப்படும்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை இருமடங்காக உயத்தப்படும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழக்கப்படும்” என்று கூறினார்.

Advertisements