சென்னை: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் ஆல்ரவுண்டரான ஷாகித் அப்ரிடி ஓய்வு பெறுவதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தார். இதன்மூலம் சர்வதேச அரங்கில் அவரின் 21 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

36 வயதான அப்ரிடி, முன்னதாக 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2015-ல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். பாகிஸ்தான் 20-20 கிரிக்கெட்டில் விளையாடிய அப்ரிடி, 2016 உலகக் கோப்பையில் பங்கேற்றிருந்தார்.

அதைத் தொடர்ந்து போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பார் என்று எல்லோரும் நினைத்த வேளையில், அப்ரிடி தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில் தற்போது ஷார்ஜாவில், பாகிஸ்தான் சூப்பர் லீக் விளையாட்டில் பெஷாவருக்காக விளையாடி 28 பந்துகளில் 54 ரன்களைக் குவித்த அப்ரிடி, ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ”சர்வதேச கிரிக்கெட்டுக்கு நான் குட்பை சொல்லிவிட்டேன். என்னுடைய ரசிகர்களுக்காக நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களுக்கு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவேன். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்.

இப்போது என்னுடைய அறக்கட்டளை மிகவும் முக்கியமாக இருக்கிறது. என்னுடைய நாட்டுக்காக சிறப்பாகவும், தீவிரமாகவும், உரிய முறையிலும் விளையாடினேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisements