சென்னை: மே 15 ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குமார், தமிழகத்தில் வரும் மே 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி, தேர்தலை ஏன் முன்கூட்டியே நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அறிவித்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம், மறுநாளே வேட்பு மனு தாக்கல் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது. மறுநாளே வேட்புமனு தாக்கல் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு கடுமையான சர்ச்சைகளை உருவாக்கியது. ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. உதாரணத்துக்கு, சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒன்றுகூட பழங்குடியினருக்கு ஒதுக்கப்படவில்லை. அதேபோல், தேர்தல் தேதியை அறிவித்த மறுநாளே வேட்புமனு தாக்கல் என தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது ஆளுங்கட்சிக்கு சாதகமான போக்கு’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருபாகரன், தேர்தல் ஆணையம் முறையாக இடஒதுக்கீட்டை பின்பற்றவில்லை என்று கூறி தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்யும் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு தொடரும் என்று உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 27ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி நடந்தபோது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் ஏன் தாமதம் என, தேர்தல் ஆணையத் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.குமாரிடம் நீதிபதி கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் குமார், தேர்தல் தாமதத்துக்கான காரணத்தை விளக்கினார். அப்போது, தேவைப்படும் உதவிகளை நிறைவேற்றித் தர தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் சில கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அதில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாகவும், சில கோரிக்கைகளை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, தேர்தல் ஆணையம் என்பது மாநில அரசின் உத்தரவின்படி செயல்படுவதாக இருந்தால், தேர்தல் ஆணைய அமைப்பை உண்டாக்கியதன் நோக்கம் சிதைந்துவிடும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 18ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமார் சுப்ரீம்கோர்ட் தேர்தல் வழக்குகளில் பிறப்பித்த பல்வேறு தீர்ப்புகளின் நகல்களை ஒவ்வொன்றாகக் கொடுத்து வாதிட்டார்.

‘நீங்கள் ஏன் இந்த ஆவணங்களை எல்லாம் புத்தக வடிவில் முறையாக தாக்கல் செய்யவில்லை? மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை நகல் எடுக்க, நகல் எடுக்கும் (ஜெராக்ஸ்) எந்திரம் இல்லையா? உங்களுக்கு உதவி செய்ய ஜூனியர் வக்கீல்களும் இல்லையா?’ என்று, சரமாரியாக கேள்விகளைக் கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வழக்கை வரும் 20ஆம் தேதி (இன்று) ஒத்திவைத்தார் .

அதையடுத்து, அந்த மேல்முறையீடு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குமார், தமிழகத்தில் வரும் மே 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, தேர்தலை ஏன் முன்கூட்டியே நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார். இதுதொடர்பான விவாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

Advertisements