சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிகையில்,”மத்திய அரசு நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்காமலும், இத்திட்டம் குறித்து எவ்வித விளக்கம் அளிக்காமலும் இத்திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மண் வளம் குறையும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும்.ஏற்கெனவே காவிரியிலிருந்து கர்நாடகா தண்ணீர் தர மறுப்பதாலும், பருவம் தவறிய மழையினாலும், வறட்சியினாலும் தமிழக விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் சொல்லொணாத் துயரத்தில் உள்ளனர்.

ஏற்கெனவே மீத்தேன், ஷேல் எரிவாயு, கெயில் எரிவாயு குழாய் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள், பொதுமக்கள், தமாகா உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்தியதையும் அதன் அடிப்படையில் மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டதையும் நினைவுகூர விரும்புகிறேன்.

எனவே, காவிரி பாசன பகுதிகளில் விவசாயத்தை தவிர இதுபோன்ற ஆபத்தான எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது. தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை வலியுறுத்தி இத்திட்டதை கைவிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”.இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisements