சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவால் வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை 75 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்கமாட்டோம் என மாணவர்கள், இளைஞர்கள் உறுதியேற்றனர். இதைத் தொடர்ந்து, மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களை விற்கமாட்டோம் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்தது. கடந்த 4 வாரங்களில் 75 சதவிகிதம் அளவுக்கு பெப்சி, கோக் விற்பனை குறைந்துள்ளது. இந்த குளிர்பானங்களின் முகவர்கள், விற்பனையாளர்கள் கொண்டுவரும் சரக்குகளை தமிழக வணிகர்கள் புறக்கணித்து வருகின்றனர். வரும் மார்ச் 1ஆம் தேதிக்குள் தமிழகத்தில் எந்தக் கடைகளிலும் பெப்சி, கோக் விற்கப்படாது என நம்புகிறோம்.

உள்நாட்டு குளிர்பானங்களை தமிழகத்தில் விற்பனை செய்ய வேண்டும் என வட மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் எங்களை அணுகி வருகின்றனர். அவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். விரைவில் அனைத்துக் கடைகளிலும் பதநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்’ என்று கூறியுள்ளார்.

Advertisements