திண்டுக்கல்: சசிகலா ஆதரவு அமைச்சரும், எம்எல்ஏ-வுமான சீனிவாசனை தங்கள் தொகுதிக்குள் நுழைய விடாமல் மக்கள் விரட்டியடித்தனர். இந்த தள்ளுமுள்ளுவில் அவரது வேட்டி அவிழ்ந்தது.

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நிதி மற்றும் வனத்துறை அமைச்சராக உள்ள சீனிவாசன் சசிகலாவின் ஆதரவாளராவார். இதனால் அவரை ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார்.இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க் கொடி உயர்த்தியதும், அவரை அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து சசி நீக்கினார். பின்னர் தனது ஆதரவாளரான சீனிவாசனை அப்பதவியில் அமர்த்தினார்.

இந்நிலையில் இத்தனை நாள்கள் கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏ-க்கள், தங்கள் விருப்பத்தை மீறி சசிகலாவுக்கும், அவரது கைப்பாவையான எடப்பாடிக்கும் ஆதரவு அளித்ததற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தங்கள் தொகுதிகளுக்குத் திரும்பும் எம்எல்ஏ-க்களை தொகுதியில் நுழையவிடாமல் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது திண்டுக்கல்லுக்கு சீனிவாசன் வந்துள்ளார். ஆனால் அங்கு அவர் மக்களின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். அங்கு திரண்ட மக்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று அவரது காரை முற்றுகையிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் சுதாரிப்பதற்குள் அவருடன் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர். இந்த சூழலில் கூட்டத்தில் இருந்த சிலர் சீனிவாசனின் வேட்டியை பிடித்து இழுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் ஒருவழியாக ஓட்டம் பிடித்தார்.

dindugal

இதற்கிடையே சீனிவாசனை எதிர்த்து திண்டுக்கல் முழுவதும் மக்கள் கண்டன போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். உங்களுக்கு ஓட்டுப் போட்டமைக்காக வருந்துகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளதால் சீனிவாசன் தரப்பு வெளியில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisements