சென்னை: ஆசிரியர் தேர்வுக்காக அச்சிட்ட விண்ணப்பங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வை நடத்த, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,க்கு தமிழக அரசு உத்தரவிட்டது. டெட் தேர்வுக்கான விண்ணப்பங்களை அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை டி.ஆர்.பி., தலைவராக இருந்த விபு நய்யர் எடுத்தார். பின்னர் அவர் திடீரென தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனமான ‘டான்சி’க்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், அச்சிடப்பட்ட டெட் தேர்வு விண்ணப்பங்களில், சில பகுதிகள் விடுபட்டிருந்ததை கல்வித் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால் 15 லட்சம் விண்ணப்பங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஏற்கனவே அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்தால் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம் என அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். எனவே, அச்சிட்ட விண்ணப்பங்களுடன் கூடுதலாக சில வரிகளை அச்சிட்டு இணைக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். தற்போது, கூடுதலாக சில வரிகளைச் சேர்த்து பயன்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., டெட் தேர்வுக்கான அறிவிப்பை பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிட்டது. ஆனால் அதில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஒரு மாதத்திலிருந்து, 17 நாட்களாக குறைக்கப்பட்டிருந்தது. இந்த விண்ணப்ப அச்சடிப்பு பிரச்னையால் மீண்டும் புதிய அறிவிப்பை வெளியிடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

Advertisements