மதுரை: தனுஷ் தங்களது மகன் எனக் கோரி மேலூர் தம்பதியர் தொடர்ந்த வழக்கில், நடிகர் தனுஷ் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினார்.

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களுக்கு பிறந்த மகன் என்றும், சிறுவயதில் தங்களை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும் உரிமை கோரி வருகின்றனர்.

இதனையடுத்து, தனுஷை தங்களுடன் சேர்த்து வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நடிகர் தனுஷ் இன்று நேரில் ஆஜராகி தனது அங்க அடையாளங்களை நீதிமன்றத்தில் காண்பித்தார். அப்போது, அவருடன் தந்தை கஸ்தூரி ராஜாவும் உடன் வந்திருந்தார்.

நீதிமன்றத்தில் ஆஜராகிய நடிகர் தனுஷ் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதேபோல் தனுஷ் தங்களது மகன் என்பதற்கு ஆதாரமாக கதிரேசன் தங்களது மகனின் பள்ளிச் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். பள்ளிச் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட அங்க அடையாளங்கள் தனுஷ் உடலில் உள்ளனவா என்பதை மருத்துவரை கொண்டு சரிபார்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisements