டெல்லி: புனே தோல்விக்குப் பிறகு எழுந்துள்ள பிட்ச் சர்ச்சையில் முரளி விஜய் தன் தடயத்தையும் பதிக்கும் விதமாக ‘அது மோசமான பிட்ச் அல்ல’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முரளி விஜய் கூறியிருப்பதாவது:புனே பிட்ச் மோசமானதல்ல. அது முதல் பந்திலிருந்தே சவால் அளிக்கும் ஆட்டக்களம் அவ்வளவே, கிரிக்கெட் வீரர்களாக இத்தகைய ஆட்டக்களத்தில் சில வேளைகளில் ஆடவேண்டிய தேவை உள்ளது. எப்போதும் மட்டையாளருக்கு சாதகமான பிட்சில் ஆடுவதில் பயனில்லை. இத்தகைய பிட்ச்தான் நம் பொறுமைக்கும், உத்திக்கும் சவாலானது.

நான் திறந்த மனதுடன் களமிறங்குபவன். எந்தப் பிட்சாக இருந்தாலும் அதற்கேற்ப நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.புனேயில் பவுலர்கள் அருமையாக வீசினர், முதல் இன்னிங்ஸில் ஆஸி.யை 260 ரன்களுக்குச் சுருட்டியது அருமையானதுதான், ஆனால் பேட்டிங்கில் சரியாக ஆடாமல் இந்தப் பிட்சில் இவ்வளவு முன்னிலை அளித்தது எப்பவுமே கடினமான சூழ்நிலையையே உருவாக்கும், நாங்கள் நன்றாக ஆடவில்லை.

டிஆர்எஸ்.-ஐ பயன்படுத்தியதிலும் சோடை போனோம். அடுத்த முறை ரிவியூவுக்கு முன்பாக இருக்கும் 15 விநாடிகள் நேரத்தை சரியான முறையில் நிதானித்து பயன்படுத்துவோம்.புனே தோல்வி பற்றி பேசினோம், தவறு செய்த இடங்களை ஆராய்ந்தோம், இன்னும் எந்தவிதத்தில் முன்னேற்றம் தேவை என்பதை திட்டமிட்டுள்ளோம்.

2 நாள் ஓய்வில் மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு டிரெக்கிங் சென்றோம், அணி வீரர்களிடையே நெருக்கத்தை அதிகரிக்க இத்தகைய பயணங்கள் பயனளிக்கும், எப்போதும் தோல்விக்குப் பிறகு சற்றே இளைப்பாறி யோசிக்க இத்தகைய பயணங்கள் உதவும்.

இலங்கையில் முதல் போட்டியில் தோற்ற பிறகு தொடரை வென்றோம், நிச்சயமாக இந்தத் தொடருக்கும் அந்தத் தொடருக்கும் ஒற்றுமை உள்ளது, 2-வது டெஸ்ட் போட்டியில் தன்னம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். அனைத்துக் கேட்ச்களையும் பிடிப்போம், எனது பேட்டிங் உத்தி பற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை, ஒரு அணியாக சோடை போனோம், பெங்களூரில் தன்னம்பிக்கையுடன் களமிறங்குவோம்  என்று முரளி விஜய் கூறியுள்ளார்.

Advertisements