புதுக்கோட்டை: நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை வைத்த போதிலும், நெடுவாசலில் போராட்டம் தொடர்கிறது.மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 14-ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக நெடுவாசல் போராட்டக் குழுவைச் சேர்ந்த 11 பேர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை சந்தித்தனர். அப்போது, ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட நடவடிக்கை எடுக்குமாறு போராட்டக்குழுவினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வேலு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது என முதலமைச்சர் கூறியதாகத் தெரிவித்தார்.‌

இதன்பின் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாயிகளை பாதிக்கும் என்பதால் அத்திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார். எனவே நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் அச்சப்படத் தேவையில்லை எனவும், அரசின் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

முதலமைச்சர் பழனிசாமி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்ட போதிலும், நெடுவாசலில் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எந்தவித பின்வாங்கலும் இல்லாமல் போராட்டம் முன்பு போல் நடைபெற்று வருகிறது. இதனிடையே, போராட்டத்தை கைவிடுவது குறித்து கிராம மக்களிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என நெடுவாசல் கிராம பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisements