சென்னை: மத்திய அரசு அனுமதி அளித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக நெடுவாசல் போராட்டக்குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்தனர். பின்னர் இந்த சந்திப்பு குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, போராட்டக்குழுவினருடம் தெரிவித்ததாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

எனவே, நெடுவாசல் போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும் என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது எனவும், நெடுவாசல் கிராமத்தில் வணிக ரீதியாக ஹைட்ரோ கார்பன் எடுக்க சுரங்க குத்தகை உரிமம் வழங்கவில்லை எனவும் அறிக்கையில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

முதலமைச்சர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை தொடர்வதா? கைவிடுவதா? என்பது குறித்து நெடுவாசலில் தான் முடிவு செய்யப்படும் என்று நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் போராட்டக் குழுவினர் பேசினர். அப்போது நெடுவாசல் பகுதியில் இருக்கும் கிணறுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதியை சேர்ந்த சிலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தை தொடர்வதா? கைவிடுவதா? என்பது குறித்து நெடுவாசலில் தான் முடிவு செய்யப்படும் என்றும் போராட்டக்குழுவினர் கூறினர்.

Advertisements