டெல்லி: ஏழை மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால் அரசு மருத்துவமனைகளில் அனைத்து நவீன வசதிகளும் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் நிறைய பேர் வரிசைப்படி காத்திருப்பார்கள். அவசரத்துக்கு தேவையான அறுவை சிகிச்சைகளுக்கு சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கும். இதனை தகர்க்கும் பொருட்டு டெல்லியில் ஆளும் அரசான ஆம் ஆத்மி புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தியுள்ளது.

டெல்லியில் வாழும் ஏழை மக்கள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வகையில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி அரசு மொத்தம் 41 தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி 30 வகையான அறுவை சிகிச்சைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. முக்கியமாக பித்தபையை அகற்றும் சிகிச்சை, குடல்வால் அகற்றும் சிகிச்சை, தைராய்டு பிரச்னையை குணப்படுத்தும் சிகிச்சை, மார்பக புற்றுநோய் கட்டிகளை அகற்றும் சிகிச்சை, கண்புரையை அகற்றும் சிகிச்சை, சைனஸ் பிரச்னையை சரிசெய்யும் சிகிச்சை, காது கேளாமைக்கு செய்யப்படும் சிகிச்சை போன்ற மக்களுக்கு தேவையான அறுவை சிகிச்சைகள் இந்த பட்டியலில் அடங்குகின்றன. இதனால் ஏழை மக்கள் வசதியான தனியார் மருத்துவமனைகளில் அரசு சார்பில் ஒரு பைசா செலவில்லாமல் இவ்வித அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டு பலன்பெறலாம் என டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements