சென்னை: “ஜெயலலிதா மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்” என்று முன்னாள் சபாநாயகரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான பி.ஹெச். பாண்டியன் தெரிவித்துள்ளார்.ஜெயலலிதா மரணமடைந்து மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களும் சர்ச்சைகளும் அரசியல் களத்தில் சுழன்றுகொண்டே இருக்கின்றன. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய அரசின் நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னையில் வரும் மார்ச் 8-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஓபிஎஸ் ஆதரவாளர்களான பி.ஹெச்.பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஹெச்.பாண்டியன், அதிரடியாக பல கேள்விகளை முன்வைத்தார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அங்கிருந்த 27 சிசிடிவி கேமிராக்களை அகற்றச் சொன்னது யார்?, ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருந்ததே? அதற்கு  பொருள் என்ன? மேல்சிகிச்சைக்கு ஜெயலலிதாவை சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஆம்புலன்ஸ் விமானம் சென்னை வந்த நிலையில், அவரை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தது யார் ? மத்திய அரசு வழங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தில் இருந்த ஜெயலலிதாவுக்கு, தேசிய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பை அகற்ற ஒப்புதல் அளித்தது யார் ?” என்று பல அதிரடி கேள்விகளை முன்வைத்துவிட்டு இறுதியில், “ஜெயலலிதா மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மனோஜ் பாண்டியன், தமிழக மக்கள் சார்பாகவும், அதிமுக தொண்டர்கள் சார்பாகவும் ஜெயலலிதா மரணத்தில் சில சந்தேகங்களை முன்வைப்பதாகக் கூறினார். அவர் எழுப்பிய கேள்விகள். ஜெயலலிதாவுக்கு எக்மோ சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளித்தது யார்? எய்மஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை விவரங்களை வெளியிடாதது ஏன்?அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது வந்த பார்வையாளர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படாதது ஏன்?அப்பல்லோவில் இருந்தபோது ஜெயலலிதாவின் கைரேகையைப் பதிவு செய்த மருத்துவரை விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா கன்னத்தில் போடப்பட்ட நான்கு துளைகளுக்கு என்ன காரணம்? ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட உணவு வகைகளின் ஆய்வு குறித்த அறிக்கைகள் வெளியிடப்படாதது ஏன்?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.