சென்னை: இளைஞர்கள் மத்தியில் நிகழும் தற்கொலை எண்ணத்தை தடுக்க பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றைய இளைஞர்கள், உணவை மறந்தாலும் பேஸ்புக்குள் உலாவர மறப்பதில்லை. இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடையும் இளைஞர்கள் பலர் தற்கொலையை தீர்வாக நினைக்கின்றனர். ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கு ஒருவர், இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வதாகத் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. அதில் அதிகமானோர் இளைஞர்கள்.
இந்நிலையில், தற்கொலை எண்ணம் கொண்ட இளைஞர்களின் மனநிலைமையை மாற்ற, பேஸ்புக் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அப்டேஷன் மிக விரைவில் பேஸ்புக்கில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக்கில் உள்ள தற்கொலை தடுப்பு டூல்களை (suicide prevention tools) பேஸ்புக் போஸ்ட், லைவ்-ஸ்ட்ரீமிங் அம்சம், பேஸ்புக் லைவ் மற்றும் மெசஞ்சர் சேவைகளில் புகுத்த இருப்பதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், பேஸ்புக் பயனாளர்கள் தற்கொலைப் பற்றிய எண்ணத்தில் இருந்தால் பேஸ்புக் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அவர்களின் எண்ணங்களை மாற்றும் நடவடிக்கைகளைக் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய உத்தியால் இளைஞர்களின் தற்கொலையை தடுக்கும் கருவியாகவும் பேஸ்புக் உருவாகியுள்ளது.

Advertisements