சென்னை: தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமிழகத்தின் விவசாயத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு திட்டமிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமிழகத்தின் விவசாயத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்று அஞ்சும் வகையில், வேளாண்மையை பாதிக்கும் வகையிலான திட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கின்றன. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய் பாதைத் திட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து 13 மாவட்டங்கள் வழியாக புதிய இயற்கை எரிவாயுக் குழாய் பாதையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 4 வழித்தடங்களில் இந்த எரிவாயுக் குழாய் பாதைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை எண்ணூரிலிருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினத்துக்கு 325 கி.மீ., நாகை முதல் தூத்துக்குடிக்கு 318 கி.மீ., நாகப்பட்டினத்திலிருந்து திருச்சி வழியாக மதுரைக்கு 242 கி.மீ, திருவள்ளூரிலிருந்து பெங்களூருக்கு 290 கி.மீ என மொத்தம் 1175 கி.மீ தொலைவுக்கு எரிவாயுக் குழாய் பாதை அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இவற்றில் 981 கி.மீ. நீள குழாய் பாதை தமிழகத்திலும், 111 கி.மீ. நீளப்பாதை ஆந்திரத்திலும், 83 கி.மீ நீளப்பாதை கர்நாடகத்திலும் அமையவுள்ளன.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, இராமநாதபுரம், தூத்துக்குடி, வேலூர் ஆகிய 13 மாவட்டங்கள் வழியாக இந்த பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த பிரமாண்டத் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்துகிறது. டிட்கோ எனப்படும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் இந்த திட்டத்தின் பங்குதாரராக இருக்கும்.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக சென்னை எண்ணூரில் இருந்து திருவள்ளூர் வழியாக பெங்களூருக்கு எரிவாயுக் குழாய் பாதை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியிருக்கின்றன. திருவள்ளூரில் தொடங்கி, லாலாப்பேட்டை, நெல்லிக்குப்பம், எடப்பாளையம், குமணன்தாங்கல், கொடியூர் வழியாக தமிழக ஆந்திர எல்லையில் உள்ள பொன்னை என்ற கிராமம் வரை தமிழகத்தில் எரிவாயுக் குழாய் பாதை அமைக்கப்படவுள்ளது.

ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் இப்பாதை அமைகிறது. இப்பாதை அமைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள வழித்தடம் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலை வழியாக செல்கிறது. சில வாரங்களுக்கு முன் இத்திட்டம் குறித்து நில அளவை மேற்கொண்ட அதிகாரிகள், விளைநிலங்களை கையகப்படுத்தும் நோக்குடன் வயல்கள் மற்றும் தோட்டங்களில் இந்தியன் ஆயில் நிறுவனம் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கற்களை நட்டு வைத்து விட்டு சென்றுள்ளனர்.
இதனால், வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர். இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உத்தேசித்துள்ள நிலங்கள் அனைத்தும் வளமான விளைநிலங்கள் ஆகும். வாழ்வாதாரத்திற்காக இந்த நிலங்களை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகள், விளைநிலங்களைச் சீரழித்து, வேளாண்மையை அழிக்கும் இந்த எரிவாயுக் குழாய்பாதை திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

எண்ணூர் – நாகப்பட்டினம், நாகப்பட்டினம்- மதுரை, நாகப்பட்டினம் – தூத்துக்குடி ஆகிய தடங்களில் எரிவாயு குழாய் அமைக்கப்படவுள்ள பகுதிகளில் பெரும்பாலானவை வளமான விளைநிலங்கள் ஆகும். இத்திட்டத்திற்காக மட்டும் மொத்தம் 20,000 ஏக்கருக்கும் அதிகமாக விளைநிலங்கள் கையகப்படுத்தப் படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவை தவிர குடியிருப்பு பகுதிகளையும் கையகப்படுத்த வேண்டியிருக்கும். ஏராளமான மரங்களை வெட்ட வேண்டியிருக்கும். இவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாது என்பது ஒருபுறமிருக்க எரிவாயு குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயம் பாதிக்கப் படும் ஆபத்தும் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் இயற்கை எரிவாயுக் குழாய் பாதை அமைக்கப்பட்டிருக்கும். இக்குழாய் பாதைகளில் எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டால் அதன் விளைவுகளை எண்ணிப்பார்க்கவே நடுங்குகிறது.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலம் மங்களூருக்கு எரிவாயு குழாய் பாதை அமைக்க முயற்சிகள் நடந்தபோது, அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் பயனாக அந்தத் திட்டத்திற்கு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தடை விதித்தார். அதன்பின் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றது. ஆனாலும் உழவர்களின் எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் இன்னும் முடக்கப்பட்டிருக்கிறது.

7 மாவட்டங்களில் 310 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படவிருந்த அந்த எரிவாயு குழாய் பாதைக்கு தடை விதித்த ஜெயலலிதா,‘‘எரிவாயு குழாய்கள் பதிப்பதால், அவை வெடிப்பதற்கான அபாயமும், உள்ளது. குறிப்பாக இத்திட்டத்தை செயல்படுத்தினால், அப்பகுதியில் பழங்கள் தரும் மரங்கள் நடுவது, முக்கிய பயிர்களை சாகுபடி செய்வது, அடுத்தடுத்து பழ மரங்களை நடுவது போன்றவை இயலாததாகி விடும்’’ என்று கூறியிருந்தார். ஆனால், அதைவிட மூன்று மடங்குக்கும் அதிகமாக மொத்தம் 981 கி.மீ நீளமுள்ள இந்த பாதையை அமைக்க ஒப்புக்கொண்டதுடன், இத்திட்டத்தில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்தை பங்குதாரராக சேர்க்க ஜெயலலிதா ஒப்புக்கொண்டாரா… அல்லது அவருக்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் அனுமதி அளித்தார்களா? என்பது ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்.

எது எப்படியாக இருந்தாலும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் கடுமையாக பாதிக்கப் படும்; உழவர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்பதால் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் அல்லது விவசாயத்தை பாதிக்காத வகையில் மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இத்திட்டத்தால் முதற்கட்டமாக பாதிக்கப்படும் திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்ட மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்.இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisements