இந்தியா: 17 கல்லூரிகளை சேர்ந்த 519 மருத்துவ மாணவர்களின் அனுமதியை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது. அவர்கள் கடந்த 3 மாதங்களாக வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே அனைத்து மருத்துவ கல்லூரிகளும், மாணவர் சேர்க்கையை செயல்படுத்த வேண்டும். 2016 செப்டம்பர் 28 ஆம் தேதி, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாநில அரசு கலந்தாய்வு நடத்தி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சில மருத்துவ கல்லூரிகள் மாணவர்களுக்கு நேரடியாக இடஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் சேர்க்கை செயல்முறை குறித்து ஆராய்ந்த போது, 4 மாநிலங்களை சேர்ந்த 17 கல்லூரிகள் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 519 மாணவர்களுக்கு நேரடியாக மருத்துவ இடங்களை வழங்கியது தெரியவந்துள்ளது என இந்திய மருத்துவ கவுன்சில் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இன்னும் பல மாணவர்கள் சேர்க்கை ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சேர்க்கை செயல்முறை உடன்படாத, அதிக அளவிலான எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையை ரத்து செய்வது இதுவே முதன்முறை.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உத்திர பிரதேச மாநிலம் அதிகளாவில் மீறியுள்ளது. 14 கல்லூரிகள் 481 மாணவர்களுக்கு நேரடியாக மருத்துவ இடங்களை வழங்கியுள்ளது. அதேபோல், கர்நாடகா,மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 3 கல்லூரிகள் 38 மாணவர்களுக்கு நேரடியாக மருத்துவ இடங்களை வழங்கியுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்லூரிகள், “மருத்துவ கலந்தாய்வு முறை மிகவும் மெதுவாக செயல்பட்டது. சேர்க்கை காலக்கெடுவுக்கு முன் இடங்களை நிரப்புவது சாத்தியம் இல்லை என்பதால் மாணவர்களை சேர்த்துக்கொண்டோம் என தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்தியது.

இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கே.கே. அகர்வால், “ நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி , மருத்துவ தொழிலை அவமானப்படுத்திய கல்லூரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் மாணவர்களுக்கும் பங்குள்ளது. அவர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர். எனவே, சேர்க்கையை ரத்து செய்வது தான் சரியான முடிவு என தெரிவித்துள்ளார்.

Advertisements