புதுக்கோட்டை: லாரன்ஸ் நடிகராக திரைத்துறையில் மட்டும் தனது பங்களிப்பை செலுத்தாமல், ஒரு சமூக சேவகனாக சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் பல உதவிகள் செய்துவந்ததை அனைவரும் அறிவார்கள். லாரன்ஸின் இந்த பங்களிப்பு, திரைமறைவில் உதவிகள் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் அடுத்த கட்டத்தை அடைந்தது. ஆரம்பம் முதலே தனது ஆதரவை போராட்டக்காரர்களுக்குக் கொடுத்து பக்கபலமாக நின்றுவந்த லாரன்ஸ், தற்போது தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்திலும் கைகொடுக்க களமிறங்கினார். ஆனால் இவர் விளம்பர நோக்கத்திற்காகவே இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகிறார் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்த நினைத்த ராகவா லாரன்ஸுக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அனுமதி வழங்கிய சில மணிநேரங்களில் நாளை சென்னைக்கு வருகை தரும் குடியரசுத் தலைவரின் பயணத்தையொட்டி இந்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், சோகமடைந்த லாரன்ஸ் மீண்டும் சென்னை காவல்துறையை அணுகி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கேட்டிருந்தார். ஆனால், இந்தப் போராட்டத்தின் மூலம் குடியரசுத் தலைவரின் வருகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பில் குளறுபடி ஏற்படும் எனக் காரணம் காட்டி சென்னை காவல்துறை போராட்டத்துக்கு அனுமதியை மறுத்துவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம்? என்பதை சென்னை மெரினா போராட்டக்காரர்களுடன் சேர்ந்து முடிவெடுத்து காவல் துறையிடம் வேறு தேதியில் இந்த அறப்போராட்டத்தை நடத்த அனுமதி கேட்டிருக்கிறார்கள்.

Advertisements