புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராமத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவை தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த இரண்டு வாரங்களாக நெடுவாசல் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தத் திட்டத்தை மாநில அரசு அனுமதிக்காது என்றும் எனவே, நெடுவாசல் மக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார். ஆனால் தங்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைத்தால் மட்டுமே தங்கள் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவிக்கச் சென்ற ஸ்டாலின் போரட்டகாரகளிடையே பேசுகையில், “போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். பொதுமக்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். மக்களின் போராட்டத்துக்கு திமுக என்றுமே ஆதரவாக இருக்கும். தொடர்ந்து 16 நாட்களாக போராட்டம் நடத்த இளைஞர்கள் & தாய்மார்கள் ஆதரவு தருவதைக் கண்டு பெருமைப்படுகிறேன். நெடுவாசல் பிரச்னையை டெல்லி வரை கொண்டு சென்றது திமுக-தான். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். டெல்லிக்குச் சென்றிருந்தபோது மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரை சந்திக்க முடியாமல் போய்விட்டது. போராட்டத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும், மத்திய மாநில அரசுகள் நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலினிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கையெழுத்திட்டதே ஸ்டாலின்தான் என்று வைகோ கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், “தமிழகத்தில் மீத்தேன் திட்டத்துக்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி கோரிய ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திட்டேன். அது உண்மைதான். மத்திய அரசு தமிழகத்தில் ஆய்வு நடத்த மட்டுமே திமுக ஆட்சி காலத்தில் நாங்கள் ஒப்புதல் அளித்தோம். அந்த ஒப்பந்தத்தில் பல்வேறு விதிகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. எனவே அதனை வைகோ முழுமையாக படித்துப் பார்க்க வேண்டும். அதற்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. வைகோ, அரசியலில் துறவரம் பூண்டுவிட்டார் என்று நினைத்தோம். ஆனால், அடிக்கடி என் மீது கொண்ட பாசத்தால், அவர் என் பெயரைக்கூறி விளம்பரம் தேடிக் கொள்கிறார்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராகவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்தித்து 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். அதில் நீட் தேர்வு பற்றிய கோரிக்கை இல்லை. ஆனால் நீட் தேர்வு குறித்து கோரிக்கை வைத்ததாக தவறான தகவல் பரப்பி வருகின்றனர்” என்றார். மேலும் “ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய-மாநில அரசுகளின் உறுதிமொழியை பொதுமக்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான் இன்று போராட்டத்தில் பங்கேற்கச் செல்கிறேன். நெடுவாசல் மக்களுக்கு தமிழக அரசு நம்பிக்கை இல்லை” என்றார். உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி பற்றி தலைமை முடிவு செய்யும். அதற்கான நாட்கள் இன்னும் உள்ளது என்றும் அவர் கூறினார்.

Advertisements