பெங்களூர்: ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரஹானேவுக்குப் பதிலாக, கருண் நாயரை களமிறக்க வாய்ப்பில்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. புனேவில் நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராத் கோலி தலைமையில் சொந்தமண்ணில் இந்திய அணி பெற்ற முதல் தோல்வி இது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, கடந்த சில வருடங்களாக ரஹானே சிறப்பாக விளையாடி வருவதாகவும் அவரது பங்களிப்பு அணிக்குத் தேவையான ஒன்றாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

முச்சதம் அடித்த பின், கருண் நாயருக்கு வாய்ப்புக் கொடுக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானதுதான். ஆனால் அணியின் தேர்வு அத்தகைய விதத்திலேயே அமைய நேரிடுகிறது. நாம் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டியிருப்பதால், கருண் நாயரை களமிறக்க முடியவில்லை. கருண் போன்ற ஒரு வீரரை கூட களமிறக்க முடியாத அளவுக்கு அணிக்கலவை, ‌வலுவாக இருப்பதும் சிறந்த விஷயம்தான் எனவும் கும்ப்ளே தெரிவித்தார்.

Advertisements