சென்னை: காயத்தில் இருந்து குணமடைந் துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா, விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி தொடரில் களமிறங்குகிறார்.

ரோஹித் சர்மா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய போது தொடை பகுதியில் காயம் அடைந்தார். இதையடுத்து காயத்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் ஓய்வில் இருந்து வந்தார்.

தற்போது காயம் முழுமையாக குணமடைந்ததை தொடர்ந்து உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ரோஹித் சர்மா, தனது ட்விட்டர் பதிவில் “இனி மேலும் காத்திருக்க முடியாது. விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக 4-ம் தேதி (நாளை) மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெறும் ஆட்டங்களில் களமிறங்க உள்ளேன். காயத்தில் இருந்து மீண்டு வர உதவிய அனை வருக்கும் நன்றி’’ என தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வடிவிலான தொடர்களிலும், வங்க தேச தொடரிலும் கலந்து கொள்ள வில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் முதல் இரு டெஸ்ட் போட்டியிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements