சென்னை : இந்திய பிரிமியர் லீக் 20- 20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில், அதிகத் தொகைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து கிரிக்கெட் நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் மாறியுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இரண்டு மில்லியன் டாலருக்கு அதிகமாக ( சுமார் 13.5 கோடி இந்திய ரூபாய்கள்) “ரைசிங் பூனே சூப்பர் ஜயன்ட்ஸ்” கிரிக்கெட் அணியால் ஸ்டோக்ஸ் வாங்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னால், 2014 ஆம் ஆண்டு, 1.3 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனின் வரலாற்று பதிவை இதன் மூலம் ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.
உலகில் அதிக லாபம் கிடைக்கின்ற கிரிக்கெட் போட்டியாக ஐபிஎல் விளங்குகிறது. உலகின் முன்னிலை கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கின்ற 10-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளன.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சமீபத்தில் மேற்கொண்ட பயணத்தின்போது நடைபெற்ற, டெஸ்ட், ஒருநாள், டுவென்டி20 ஆகிய மூன்று கிரிக்கெட் போட்டி பிரிவுகளிலும், இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.
ஆனால், இங்கிலாந்தின் பல விளையாட்டு வீரர்கள், இந்திய ரசிகர்களை கவர்ந்ததோடு, புதிய திறமையான வீரர்களை தேடி கொண்டிருந்த ஐபிஎல் அணி உரிமையாளர்களின் கவனத்தையும் பெற்றனர்.
இந்தியாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், புனேயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் “ரைசிங் பூனே சூப்பர் ஜயன்ட்ஸ்” அணியானது, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ஏலம் எடுப்பதற்கு முன்னர், கடும் போட்டி நிலவியது,
அவருடைய அணியின் சக வீரர் டைமால் மில்ஸ், இந்திய கிரிக்கெட் அணி தலைவர் வீராட் கோலியின் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் 1.8 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டார். இது அவருடைய அடிப்படை விலையை விட 10 மடங்கு அதிகமாகும்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான முகமது நபியை 45 ஆயிரம் டாலருக்கு ஹைதராபாத் அணி வாங்கியுள்ளதால், அந்த நாட்டில் இருந்து இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் முதல் கிரிக்கெட் வீரராக இவர் மாறியுள்ளார்.

Advertisements