இந்தியா: இதுவரை ஆஸ்திரேலிய அணி பல்வேறு டெஸ்ட் போட்டிகளை இந்திய மைதானங்களில் விளையாடியதுண்டு. அந்த அனைத்து மைதானங்களிலும் இந்திய அணிக்கு பெரும்பான்மையானவை சாதகமாகவே இருந்துவந்துள்ளன. கடைசியாக விளையாடிய புனே மைதானமும் அப்படியே என்றாலும், இந்திய அணி எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தது. அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் பலரும் இரண்டாம் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்குமா என ஆவலுடன் எதிர்பார்த்துவரும்நிலையில் பெரும் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று  விளையாட உள்ள பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைத்திருந்தாலும், ஒட்டுமொத்த அணிக்கும் மைதானம் எதிரான ஒன்றாகவே உள்ளது. காரணம், கடந்த 20 வருடங்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய போட்டிகளில் இந்திய அணியை இந்த மைதானத்தில்தான் ஆஸ்திரேலிய அணி அதிக முறை வீழ்த்தியுள்ளது. மற்ற மைதானங்களின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த மைதானத்தில் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதுதான் சொந்த மண்ணில் இந்திய அணியின் அதிகபட்ச தோல்வியாகும்.

அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த மைதானத்தில் 7 முறை சதம் அடித்துள்ளனர். அதுவும் மற்ற மைதானங்களை ஒப்பிட்டால் அதிகமான ஒன்றாக இருக்கிறது. இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் சராசரியும் அதிகம். 36.67 சரசரியை டெஸ்ட் போட்டிகளில் கொண்டுள்ளனர் ஆஸ்திரேலிய அணியினர். இன்றைய மைதானம் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements