சென்னை: தீபா பேரவைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று, தீபாவின் கணவர் மாதவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவின் கணவர் மாதவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது: கடந்த 3 மாதமாக நான் ஜெ.தீபாவுடன் இருந்து தொண்டர்களின் விருப்பப்படி செயல்பட்டேன். நாங்கள் இருவரும் இணைந்து பேரவை தொடர்பாக நல்ல முடிவு எடுத்துவந்தோம். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது. ஜெ.தீபா ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தது, பேரவையைத் தொடங்கியது, பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது என எதுவுமே எனக்குத் தெரியாது. இவை அனைத்துமே தீபாவின் தனிப்பட்ட செயல்பாடுகள்தான்.

ஆனால் பேரவை தொடங்கியபோது தீபாவுக்காகவே அந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். மேலும் பொறுப்பாளர்களின் பட்டியலில் ஒருவரைக்கூட எனக்குத் தெரியாது. தீபா தனித்து செயல்பட விரும்புகிறார். அவர் தனித்து செயல்பட்டாலும் சிறப்பாகச் செயல்படுகிறார். நான் இனி பேரவை சம்பந்தமான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டேன். எனக்கும், தீபா பேரவைக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது. தீபா நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என்று அவர் கூறினார்.

Advertisements