சென்னை: சசிகலா நியமனம் தொடர்பாக டி.டி.வி.தினகரன் அளித்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விளக்கம் கேட்டுள்ளது.

அதிமுக-வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதையடுத்து, கட்சியில் பிளவு ஏற்பட்டநிலையில், அதிமுக-வின் சட்ட விதிகளை காரணம் காட்டி, சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக எம்.பி.மைத்ரேயன் தலைமையில் பன்னீர் அதரவு எம்.பி.க்கள் புகார் மனு கொடுத்தனர். இதற்கு பதிலளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஆனால், சசிகலா சிறையில் இருப்பதால் அவருக்குப் பதிலாக கட்சியின் துணைப் பொதுச்செயாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு பதில் அனுப்பினார். இந்நிலையில் தினகரன் அளித்துள்ள பதிலை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. அதிமுக-வில் அவர் அதிகாரப்பூர்வமான எந்த பதவியிலும் இல்லை என்பதால் அவர் கையெழுத்திட்டு அனுப்பிய பதில் கடிதத்தை ஏற்க முடியாது என்றும், அதிகாரப்பூர்வ பதவியில் இருப்பவர்கள் மட்டுமே பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும், இதுகுறித்து, வரும் 10-ஆம் தேதிக்குள் சசிகலாவின் கையெழுத்திட்ட பதிலை அனுப்ப வேண்டும் என்று மீண்டும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணைய ஆவணங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகள் பட்டியலில், தினகரன் பெயர் இல்லை. எனவே, சசிகலாவோ அல்லது நிர்வாகிகள் பட்டியலில் உள்ள வேறு ஒரு நிர்வாகியோதான் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சசிகலா தரப்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்று தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு நகல் மைத்ரேயன் எம்.பி.க்கும் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு குறித்து ஓ.பி.எஸ்.தரப்பு பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக ஓ.பி.எஸ். அணியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisements