நெல்லை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தினமும் 62 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறார் மாற்றுத்திறனாளி மாணவர்.

நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த ராமையாவின் மகன் அழகுராஜா. இவர் 6-ம் வகுப்பு படித்த போது தசை சிதைவு நோய் ஏற்பட்டு இரு கால்களும் செயல் இழந்தது. இதனால் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 364 மதிப்பெண் எடுத்த அழகுராஜாவால் பள்ளி சென்று படிப்பை தொடர முடியாமல் போனது. இருப்பினும், கல்வியின் மீது உள்ள ஆர்வம் மிகுதியால், தந்தை தோளில் பயணித்தபடியே டுட்டோரியல் கல்லூரி மூலம் பிளஸ் 2 தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் அறிவிப்பு வெளியாகி, மாணவர்கள் அனைவருக்கும் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால், தேர்வு எழுதும் மையத்தை பார்த்த அழகுராஜாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அழகுராஜா தேர்வு எழுதுவதற்காக 31 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பங்களா சுரண்டையில் தேர்வு மையத்தை மாவட்ட கல்வி நிர்வாகிகள் ஒதுக்கீடு செய்திருந்தனர்.

இந்நிலையில், மார்ச் 2 ம் தேதி பன்னிரெண்டாம் தேர்வுகள் தொடங்கியதையடுத்து, ஜவுளிக்கடையில் வேலை செய்து வரும் அழகுராஜாவின் தந்தை ராமையா, அழகுராஜா தேர்வு எழுதுவதற்காக தனது தோளிலேயே அவரைத் தூக்கிச் செல்கிறார். மேலும், தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்று வர தினமும் 700 ரூபாய் வரை செலவழிப்பதாக வருத்தத்துடன் கூறினார்.தனக்கு இது மிகப் பெரிய செலவு தான் என்றாலும், மகனின் ஆசையை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். புளியங்குடியிலேயே தேர்வு மையம் ஒதுக்க மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மாற்றுத்திறனாளி மாணவர் அழகுராஜா மற்றும் அவரின் தந்தை படும் இன்னல்களை பார்க்கும் அப்பகுதி மக்களும் உள்ளுரிலேயே தேர்வு எழுத வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தேர்வு எழுதுவதற்காக தினமும் 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாற்றுத்திறனாளி மாணவர் அழகுராஜா அலைக்கழிக்கப்படுவது குறித்து திருநெல்வேலி மாவட்ட கல்வி அதிகாரிகளை நியூஸ் 7 தமிழ் தொடர்பு கேட்டபோது, விண்ணப்பத்தில் தான் மாற்றுதிறனாளி என்று அழகுராஜா குறிப்பிடவில்லை என்று ஒற்றை வார்த்தையில் அதிகாரிகள் பதில் அளித்தனர்.

தேர்வு எழுதுவதற்கு மாற்றுத்திறனாளி மாணவரை 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு அலையவிடுவது, கல்வி அதிகாரிகள் மீது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது!

Advertisements