சென்னை : ஏப்ரல் 24-ம் தேதி இங்கிலாந்தில் இந்திய பிரதமர் மற்றும் இங்கிலாந்து ராணி இருவருக்கும் ‘பாகுபலி 2’ திரையிடப்படவுள்ளது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் ‘பாகுபலி’. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள்.

இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’வில் விடை தெரியவிருக்கிறது.

ஏப்ரல் 28, 2017ல் ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இங்கிலாந்தில் இந்தியாவின் 70-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட் ஏப்ரல் 24 முதல் பல திரைப்படங்களை திரையிடவுள்ளது. இதில் திரையிடப்படும் படங்களில் ‘பாகுபலி 2’வும் இடம்பெற்றுள்ளது.

இந்திய பிரதமர் மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் உள்ளிட்ட பல பிரபலங்கள் ‘பாகுபலி 2’ம் பாகத்தை இவ்விழாவில் காணவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisements