சென்னை:சென்னையில் பல்வேறு புதிய ரயில்வே திட்டங்களை, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கோட்டை ரயில் நிலையங்களில் வைஃபை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னை மூர் மார்க்கெட்டிலிருந்து பேசின் பிரிட்ஜ் வரை 5 மற்றும் 6வது பாதைகள், தாம்பரம் ரயில் நிலையத்தில் 2வது வாயில் உள்ளிட்டவற்றை அவர் இன்று தொடங்கி வைத்தார். சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில், இரு பக்க நடைமேடை உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் அவர் தொடங்கி வைத்தார். செங்கோட்டை – ஆரியங்காவு இடையே உருவாக்கப்பட்டுள்ள புதிய அகலப் பாதையையும் காணொலி காட்சி முறையில் மத்திய அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

இது தவிர, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்கும் திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார். கோயமுத்தூர் – பெங்களூரு இடையே விரைவில் புதிய ரயில் இயக்கப்படும் எனவும் ரயில்வே துறை நவீன மயமாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ரயில்வே கட்டமைப்புகள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. பழைய பெட்டிகளுக்குப் பதிலாக அதிநவீன எல்எச்பி பெட்டிகள் ரயில்களில் இடம் பெற உள்ளன. தற்போதுள்ள பெட்டிகளிலும் மேம்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிவித்தார். இவ்விழாவில் மாநில அமைச்சர் விஜயபாஸ்கர், மைத்ரேயன் எம்.பி, எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisements