சென்னை: இந்தியாவில் இதுவரை ரூ.70 ஆயிரம் கோடி கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவின் துணைத் தலைவர் அரிஜித் பசாயத் கூறியுள்ளார்.

நாட்டில் அதிகரித்துவரும் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், அது தொடர்பான வழக்குகளை புலனாய்வு செய்யவும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் நீதிபதி அர்ஜித் பசாயத் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

இந்த சிறப்புக் குழு நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இதுவரை கருப்புப் பணம் தொடர்பாக 5 அறிக்கைகளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. தனது ஆறாவது அறிக்கையை வரும் ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில், கருப்புப் பண மீட்பு தொடர்பாக இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் கூட்டம் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருமானவரித் துறை, வணிகவரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டன.

இதையடுத்து, துணைத் தலைவர் அரிஜித் பசாயத் கூறியதாவது: வருமானவரித் துறை, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகளில் இதுவரை ரூ.70 ஆயிரம் கோடி கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.16 ஆயிரம் கோடி வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருந்த பணமாகும். கருப்புப் பணம் அதிகரிப்பதை தடுப்பதற்கு, பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறோம். அதில் சில பரிந்துரைகளை மத்திய அரசு பரீசிலினை செய்து வருகிறது. குறிப்பாக ரூ. 3 லட்சத்துக்கு மேல் யாரும் ரொக்கமாக பரிமாற்றம் செய்யக் கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டது. இதை மத்திய அரசு வரும் ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது. இதையடுத்து, ரூ.15 லட்சத்துக்குமேல் ரொக்கமாக கையில் இருந்தால் அது கணக்கில் காட்டப்படாத பணம் என கருதப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதையும் அரசு பரீசிலித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

Advertisements