அமெரிக்கா:அமெரிக்காவில் மேலும் ஒரு இந்தியர் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில், அவர் படுகாயமடைந்தார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு அங்கு இனவெறி அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீனிவாஸ் என்ற இந்திய என்ஜீனியர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரையடுத்து நியூயார்க்கில் ரயிலில் பயணித்த இந்திய வம்சாவளி பெண் ஏக்தா தேசாய் என்பவரை, அதே ரயிலில் பயணித்த அமெரிக்கர் ஒருவர், இந்தியாவுக்குத் திரும்புமாறு மிரட்டினார்.

இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹார்னிஷ் படேல் (43), அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்திலுள்ள லான்காஸ்டர் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தின் ஈரம் காயும் முன்பே, இன்னொரு இந்தியரின் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

வாஷிங்டன்னில் உள்ள கென்ட் பகுதியில் வசிக்கும் சீக்கியர் ஒருவர், தனது வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், ‘உன் நாட்டுக்குத் திரும்பிப் போ’ என்று கத்தினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அடையாளம் தெரியாத நபர் தனது துப்பாக்கியால் சீக்கியரைச் சுட்டுவிட்டு தப்பிவிட்டார். இதில் கையில் பலத்த காயமடைந்த சீக்கியர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அமெரிக்காவில் இந்தியர்கள் தாக்கப்பட்டு வருவது, அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements