சென்னை: சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் ‘டிக்:டிக்:டிக்’ படத்தின் வில்லனாக ஆரோன் அஜீஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான படம் ‘மிருதன்’. மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டது. வசூல் ரீதியில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டிக்:டிக்:டிக்’ படத்தில் ஜெயம் ரவி நடிக்க படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஜெபக் தயாரிக்க, நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார்.

இப்படம் விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் த்ரில்லர் படமாகும். பெரும் பொருட்செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான அரங்கு அமைத்து அதற்குள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது வில்லனாக ஆரோன் அஜீஸ் என்ற சிங்கப்பூர் நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜெயம் ரவி – ஆரோன் அஜீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறது படக்குழு.

Advertisements