தமிழ்நாடு: கடந்த சில நாட்களுக்கு முன்பு குளிர்பான கம்பெனிகள் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தாமிரபரணியில் தண்ணீர் எடுப்பதை கண்டித்து பாளையங்கோட்டை, நெல்லை மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

தமிழக விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டுக் குளிர்பானங்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துள்ள இளைஞர்கள் என அனைவரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தென் தமிழகத்தில் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடைவிதிக்க கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக இன்று வெளிநாட்டு குளிர்பானங்களை தயாரிக்கும் ஆலைகள் தாமிரபரணியில் தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து பாளையங்கோட்டையில் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பெப்சி, கோக் ஆகிய வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து அதன் விற்பனை மெல்ல மெல்ல நிறுத்தப்பட்டு வருகிறது. தமிழக வணிகர்கள் சங்கமும், கோக், பெப்சியை விற்க மாட்டோம் என்று முடிவு எடுத்துள்ளன.வறட்சி காரணமாக விவசாயிகள் மடிந்து வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவு கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது.

தாமிரபரணியில் தண்ணீர் எடுப்பதை கண்டித்து பாளையங்கோட்டை, நெல்லை முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று திருநெல்வேலியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் பொது மக்கள். காவல் துறையினர் பேச்சு வார்த்தைக்கு பிறகு மக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இந்நிலையில் சமூகவலைதளங்கள் மூலம் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் திரண்ட இளைஞர்கள் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுகின்றனர். அப்போது அவர்கள் கூறுகையில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் தவறான அறிக்கையாலேயே தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

Advertisements