சென்னை: ஒரு குடும்ப ஆட்சியை நீக்கி ஜெயலலிதா ஆட்சி மலர தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கிரீன் வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று தனது ஆதரவு நிர்வகிகளுகிடையே பேசுகையில், “கடந்த 28 ஆண்டுகளாக கட்சிக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா. அவரின் நலத்திட்ட உதவிகளால் கடந்த 2016-ஆம் ஆண்டு மீண்டும் நமக்கு ஆட்சியை தந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக நம்மைவிட்டு பிரிந்து விட்டார். ஜெயலலிதாவின் நோக்கம் குறிக்கோள் கோட்பாடின் அடிப்படையில் ஆட்சியை நடத்தினோம். ஆனால் இதில் ஒரு குடும்ப ஆட்சி இடையில் புகுந்து விட்டது. ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் கட்சியில் இருக்க கூடாது என்பதற்காக தான் 2011-ஆம் ஆண்டு சசிகலா உள்பட அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கினார். ஆனால் அந்த குடும்பம் மீண்டும் உள்ளே வந்து விட்டது.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா கிச்சையில் இருந்த போது நாங்கள் 75 நாட்களும் சென்று வந்தோம். ஆனால் ஒரு நாள் கூட ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை. அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்கலாம் என்று சொன்னதை கூட அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசியில் மரண செய்தி தான் வந்தது. அதன் பிறகு என்னை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார்கள். அப்போதும் நான் வேண்டாம் என்று தான் சொன்னேன். ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் சுதந்திரமாக செயல்பட முடியாது என்று கருதி வேண்டாம் என்றேன்.

ஆனால், அனைவரும் வற்புறுத்தியதால் முதலமைச்சராக நான் ஒப்புக்கொண்டேன். ஆட்சி நல்லாதான் போய்க்கொண்டிருந்தது. வர்தாபுயல், ஜல்லிக்கட்டு பிரச்னை வந்தது. அதில் நம்மால் முயன்றதை மக்களுக்காக செய்து கொடுத்தோம். அது சசிகலா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. அதில் இருந்து தான் பிரச்னை ஆரம்பமானது. சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக முன்மொழிந்தது தான் நான் செய்த மிகப்பெரிய பாவம். பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை நான் விருப்பமின்றியே முன்மொழிந்தேன்.

ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை கேட்டு வருகிற 8-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசின் உத்தரவு அமையும். அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களுக்கு விளக்கம் அளிக்காமல் எந்த விதத்திலும் தப்ப முடியாது. விளக்கம் அளிக்காவிட்டால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும். 8-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதத்தை பார்த்து டெல்லி அதை ஆராய்ந்து மாலை 5 மணிக்கு நீதி விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது என்ற செய்தி அமைய வேண்டும். அதற்கேற்ப திரளாக தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம். ஒரு குடும்ப ஆட்சியை நீக்கி ஜெயலலிதா ஆட்சி மலர தொடர்ந்து பாடுபடுவோம்” என்று கூறினார்.

Advertisements