புதுக்கோட்டை: நெடுவாசலில் நேற்று பதினேழாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. வழக்கம் போல் மக்கள் உற்சாகத்தோடு போராட்டத்தில் பங்கேற்றனர். இடைவிடாமல் பகலும் இரவுமாக ஒலிபெருக்கியில் உரை வீச்சை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள் பேச்சாளர்கள். நேற்று காலை போராட்ட களத்திற்கு களத்தூர் கிராமத்திலிருந்து சில லாரிகளில் மக்கள் வந்து குவிந்தனர். இதே போல் மதுரை, மற்றும் வெளியூர்களிலிருந்தும் இளைஞர்கள் போராட்டத்திற்கு வருகை தந்தனர். போராட்ட களத்தில் இருந்த பெண்கள் இன்று ஒரு நூதன முறையில் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். அதாவது, பெண்கள் வட்ட வடிவில் நின்று கொண்டு கும்மியடித்து பாட்டுப்பாடி மத்திய அரசிற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதே போல் இந்தப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக கிராமிய கலைக் குழுவினரும் நெடுவாசல் கிராமத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் உரத்த குரலெடுத்து பாட்டுப்பாடி போராட்ட களத்தை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் நேற்று காலையே போராட்டக் குழு பிரதிநிதிகள் மதுரைக்கு பாஜக தலைவர்களை சந்திக்கப் புறப்பட்டுச் சென்றனர். இந்தக் குழுவினர் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அப்போது மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கோட்டைக்காடு மக்களோடு பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வைத்தார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ். ஆனால் நெடுவாசல் மக்கள் பேச்சு வார்த்தைக்கு முன்வரவில்லை. மத்திய அரசு இத்திட்டத்தை கைவிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது வரை போராட்டம் தொடரும் என்று பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் கணேஷ் தன் முயற்சியை கைவிடுவதாக இல்லை. எப்படியும் இன்று நெடுவாசல் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை நிறுத்துவது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை ஆட்சியர் கணேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை 9 மாதத்திற்குள் மூடவும், கருவிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுவாசல் பகுதி மக்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார். ஆனால் நெடுவாசல் மக்கள் மாவட்ட ஆட்சியரின் பேச்சு வார்த்தைக்கு உடன்படுவார்களா என்பது தெரியவில்லை.

Advertisements