சென்னை: டெட் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டது. தமிழக அரசு இடஒதுக்கீட்டு முறையின்படி தகுதிகாண் மதிப்பெண் சலுகை அளிக்க ஓர் அரசாணையையும், 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என மற்றொரு அரசாணையையும் வெளியிட்டது. தமிழக அரசு பிறபித்த 2 அரசாணைகளை எதிர்த்து ஆசிரியர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 2 அரசு ஆணைகளும் செல்லும்’ என உத்தரவிட்டனர். இதனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. மூலம் ஏப்ரல் 29, 30ஆம் தேதிகளில் ’டெட்’ தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் மார்ச் 22ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும். தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தனித்தனியாக விண்ணப்பம் பெற வேண்டும். விண்ணப்பம் பெறும் இடங்கள், மாவட்ட வாரியாக டி.ஆர்.பி-யின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மார்ச் 23ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். ஒருவருக்கு ஒரு தேர்வுக்கு, ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு விண்ணப்பத்தின் விலை 50 ரூபாய் ஆகும். இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புவோர் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http:/trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப விநியோக, விண்ணப்ப சமர்ப்பிப்பு மையங்களை பார்த்து அறியலாம்.

Advertisements