தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாத காரணத்தால், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முக்கியச் சொத்துகளான கிங்ஃபிஷர் வில்லா மற்றும் கிங்ஃபிஷர் ஹவுஸ் ஆகியவை இன்று மீண்டும் ஏலம் விடப்படுகின்றன.

கிங்ஃபிஷர் நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையா, வங்கிக் கடன்களை திரும்ப செலுத்தாததால், அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சொத்துகளை ஏலம்விடுவதன்மூலம் வங்கிகள் தங்களது வாராக் கடனை பெற முடிவு செய்தன. அதன்படி, ஏற்கனவே மூன்றுமுறை அவரது சொத்துகள் ஏலம் விடப்பட்டும், அடிப்படை ஏலத்தொகை அதிகமாக இருந்தது, யாரும் ஏலம் கேட்க முன்வராதது போன்ற காரணங்களால் அது தோல்வியில் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முக்கியச் சொத்துகளான கிங்ஃபிஷர் வில்லா மற்றும் கிங்ஃபிஷர் ஹவுஸ் ஆகியவை இன்று மீண்டும் ஏலம் விடப்படுகின்றன. இன்றைய ஏலத்தில் அடிப்படை ஏலத்தொகை குறைக்கப்பட்டுள்ளது.

கிங்ஃபிஷர் ஹவுஸுக்கு அடிப்படை ஏலத்தொகை 10 சதவிகிதம் குறைக்கப்பட்டு ரூ.103.50 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் முதன்முறையாக நடந்த ஏலத்தில் இதன் அடிப்படை ஏலத்தொகை ரூ.150 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு இரண்டாவது ஏலத்தில் ரூ.135 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. சமீபத்தில், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் அடிப்படை ஏலத்தொகை ரூ.115 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று முறைகளிலும் யாரும் ஏலம் கேட்க முன்வரவில்லை.

அதேபோல, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு முக்கியச் சொத்தான கிங்ஃபிஷர் வில்லா வடக்கு கோவாவில் உள்ளது. இதன் அடிப்படை ஏலத்தொகையும் 10 சதவிதம் குறைக்கப்பட்டு ரூ.73 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத ஏலத்தில் இது ரூ.81 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements