சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் உலகத்தரம் வாய்ந்தவை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தமிழக அரசுக்கு அளித்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை உலகத்தரம் வாய்ந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றார். மாநில அரசின் கோரிக்கையை ஏற்றே எய்ம்ஸ் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டதாகத் தெரிவித்த ராதாகிருஷ்ணன், அவர்கள் அளித்த அறிக்கை, சென்னை அப்போலோ மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கை ஆகியவற்றை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிப்படி, தனிப்பட்ட நபருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை வெளியிடக்கூடாது எனினும், ஜெயலலிதா மறைவு குறித்து வதந்திகள் பரப்பப்படுவதால் சிகிச்சை விபரங்களை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

Advertisements