lawrenceசென்னை: ‘மொட்ட சிவா கெட்ட சிவா ‘படத்துக்கு தடை நீக்கப்படவில்லை என்று பைனான்சியர் போத்ரா விளக்கமளித்துள்ளார்.

சாய் ரமணி இயக்கத்தில் லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் உருவான இப்படத்தின் வெளியீட்டு உரிமையை மதன் பெற்றிருந்தார்.இப்படம் வெளியாகவிருந்த தருணத்தில் பணமோசடி விவகாரத்தில் மதன் கைது செய்யப்பட்டதால் இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. பைனான்சியர்கள் பலருடைய பணம் இதில் முடங்கியிருப்பதால், எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது.

மார்ச் 10ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், இப்படத்தின் மீது பைனான்சியர் போத்ரா தொடுத்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பலரும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என தகவல் பரப்பியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பைனான்சியர் போத்ரா நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது, “‘மொட்ட சிவா கெட்ட சிவா’ தயாரிப்பாளர் வேந்தர் மூவீஸ் மதன் தான் . அவர் எவ்வளவு பெரிய குற்றவாளி என்பது அனைவருக்கும் தெரியும். 105 மாணவர்களின் பணத்தை மோசடி செய்தவர். அந்தப் பணத்தை இன்னமும் யாருக்கும் கொடுக்கவில்லை.

தலைமறைவாக இருந்து கொண்டு தமிழ்நாட்டு போலீசையே அலையவிட்டவர். அப்படிப்பட்ட மதன் தயாரித்துள்ள படம் தான் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. அந்தப் படத்துக்குத் தான் நான் ஏழரை கோடி ரூபாய் பணம் கொடுத்தேன். அது தரப்படவில்லை. அதனால் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பைனான்சியரின் பாக்கி தீர்க்கப்படாமல் படத்தை வெளியிட முடியாது .

எனவே தான் படத்துக்கு நீதிமன்றம் தடை ஆணை வழங்கியது. அந்தத் தடையை இந்த நேரம் வரை விலக்கப்படவோ ரத்து செய்யப்படவோ இல்லை. ஆனால் படத்துக்கு தடை நீக்கப்பட்டு விட்டது என்று ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன.

மார்ச் 10- ல் படம் வெளியாகும் என்று விளம்பரங்களும் வருகின்றன. இது எவ்வளவு மோசடியானது.?. இந்தப் படத்துக்கான இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. மாண்புமிகு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், விமலா ஆகியோர் விசாரித்துள்ளனர்.இந்நிலையில் நீதிபதி ஒருவரின் மகன் சினிமாவில் பாடல் எழுதுகிறார். அவரை வைத்து தாங்கள் தடையை ரத்து செய்து விட்டோம் என்று தவறாக செய்தி பரப்பி வருகிறார்கள். இது எவ்வளவு பெரிய பொய்? நீதிபதி என்பவர் யார் சொல்வதையும் கேட்பவரல்ல. கடவுளே வந்தாலும் அவரை மாற்ற முடியாது. நான் நீதிபதியையும் நீதிமன்றத்தையும் முழுதாக நம்புகிறேன்.

விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் யாரும் இதை எல்லாம் நம்ப வேண்டாம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது படம் வெளியாகிறது என்று விளம்பரம் செய்வது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்” என்று தெரிவித்துள்ளார் போத்ரா.

Advertisements