புதுடெல்லி: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, டெல்லியில் தமிழ் இளைஞர்கள் அமைப்பின் சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் (இயற்கை எரிவாயு) உற்பத்தி திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதற்கு பல முன் உதாரணங்கள் உள்ளன.

எனவே, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் (நில உரிமையாளர்கள்) இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நெடுவாசல் கிராம விவசாயிகளுக்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக, எங்கள் அமைப்பின் சார்பில் டெல்லியில் உள்ள மண்டி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி நடைபெற்றது.

பின்னர் விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காக, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வலியுறுத்தி பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் மனு கொடுத்துள்ளோம்.இவ்வாறு அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெறிவித்திருந்தது.

Advertisements