சென்னை: இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த ‌தமிழ‌க மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு மீனவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராமேஸ்வரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடிக்கு அருகே ஆதாம்பாலம் பகுதியில் நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 4 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் தங்கச்சிமடம் ஐயன்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் குண்டடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சரோனுக்கு கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வலைகளை அதே இடத்தில் விட்டுவிட்டு மீனவர்கள் பதறியடித்துக் கொண்டு கரை திரும்பினர்.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கவலை தெரிவிக்கும் மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜ், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மவுனமாக இருக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வாழ்வாதாரத்திற்காக கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களை தாக்குவதையும், அவர்களை சிறைபிடிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் இலங்கை கடற்படையினர், தற்போது உயிரைப் பறிக்கும் அளவிற்கு மூர்க்கத்தனமான நிலைக்கு சென்றுள்ளனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை கடற்படையினரால் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், தமிழக மீனவர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements