கர்நாடகம்: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் கடந்த 15-ம் தேதி அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு,காமராஜ் உள்ளிட்டோர் சசிகலாவை கடந்த வாரம் சந்தித்து ஆசி பெற்றனர். இதேபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்களும் சசிகலாவை சந்திக்க அனுமதி கோரி கர்நாடக சிறைத் துறையிடம் கடிதம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்ற வாளியான சசிகலாவை தமிழக முதல் வரோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ சந்திப்பது சட்டப்படி குற்றமாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மேல் ஆணை யிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்ட அமைச்சர்கள் குற்றவாளியுடன் உறவு பாராட்டுவதை அனுமதிக்க முடியாது.

எனவே சசிகலாவை சந்தித்த அமைச் சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும். இதேபோல குற்றவாளியான சசிகலாவை பொது ஊழியரான அரசு அதிகாரிகளோ, அமைச்சர்களோ சந்திக்க அனுமதிக்கக் கூடாது என கர்நாடக சிறைத்துறை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி நடைபெறுவதால் ச‌சிகலாவை எக்காரணம் கொண்டும் தமிழக சிறைக்கு மாற்றக் கூடாது” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு அடுத்த சில தினங்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், “சிறையில் சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன?, இதுவரை யாரிடம் தொலைபேசியில் பேசினார்?, சிறையில் என்ன வேலை செய்கிறார்?” என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டிராபிக் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisements