புதுக்கோட்டை: மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக, புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் 20 நாள்களாக தொடர்ந்து மக்கள் போராடி வருகிறார்கள். ‘மத்திய அரசு, இந்தத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, போராட்டம் தொடரும்’ என நெடுவாசல் மக்கள் அறிவித்துள்ளார்கள்.

கடந்த 19 நாள்களில், வைகோ, திருமாவளவன், சீமான், முத்தரசன், மு.க.ஸ்டாலின், அன்புமணி, டி.ராஜா, திருச்சி சிவா, ஹெச்.ராஜா போன்ற தலைவர்களும், திரைப்பட நடிகர்கள், மன்சூர் அலிகான், ஜி.வி.பிரகாஷ், பெப்சி விஜயன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், மு.களஞ்சியம், சசிகுமார் ஆகியோரும் நெடுவாசலில் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

கடந்த 20 நாள்களாக போராட்டக்களத்துக்கு வரும் பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது. அனவயல், சிறுவாவிடுதி, புள்ளான் விடுதி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ஒவ்வொரு நாளும் ஒரு கிராம மக்கள், விளைபொருள்கள், பலா, வாழை உள்ளிட்டவற்றுடன் ஊர்வலமாக வந்து, போராட்டத்தில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.

இதனிடையே, கடந்த 15-ம் தேதியில் இருந்து 20 நாள்களாக நெடுவாசல் கிழக்கு ஊராட்சியைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி ஆயியம்மாள், ஊன்றுகோலை ஊன்றியபடி, தள்ளாத வயதில் காலை 9 மணிக்கு வந்தவர் மாலைவரை போராட்டக்களத்தில் உட்கார்ந்து, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பலரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டு, ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக முழக்கமிட்டு வருகிறார்.

சோகமாக போராட்டக்களத்தில் உட்கார்ந்திருந்த ஆயியம்மாளிடம் பேசினோம். “இவ்வளவு நாள்களா, லட்சக்கணக்குள, மக்க மனுசனெல்லாம், பொழப்பை விட்டுட்டு வந்து போராடிக்கிட்டு கிடக்குது. போராடும் எங்க பிள்ளைகளுக்கு பக்கத்து ஊர்க்காரக எல்லாம் வந்து ஆதரவு தெரிவிக்கிறாங்க. எங்க ஊர்ல நெல்லு, கொள்ளு, காய்கறி, கடலை, பலா, வாழை’ னு எல்லாம் விளையும். அந்த வெல்லாமையை கெடுக்கப்போறாங்களாம். இவ்வளவு மக்களை அழிச்சிட்டு அந்த மனுசன் என்ன பண்ணப்போறாரு. அவரும் ஆணோடும் பொண்ணோடும் பிறந்திருப்பாரில்ல. அப்படிப் பிறந்திருந்தால், எங்க கஷ்டம் எல்லாம் அவருக்குப் புரியும். நல்லா விளையிற இந்த நிலத்தை எல்லாம் வீணாக்கிட்டு, இவங்க என்னத்த எடுக்கப்போறாங்க. என் காலம் போயிடுச்சு. இனி எனக்கு என்ன இருக்கு. இங்க போராடுற சிறுவயசுப் புள்ளைகளை நினைச்சா தூக்கமே வரலய்யா. எல்லா மக்களும் போராடுது. இந்தத் திட்டம் வந்தால், எங்க ஊரே சுடுகாடாகிடும்னு சொல்லுறாங்க.

நல்லா வாழுகிற எங்களை சுடுகாட்டுக்கு அனுப்பத்தான் இந்த அரசாங்கம் துடிக்குதாய்யா. அதான் மனசு இல்லாமல், தினமும் காலையில் இருந்து சாயங்காலம் வரை வந்து உட்கார்ந்து கிடக்கேன். எங்க வீடு கொஞ்சம் தூரம்தான். ஆனால், புள்ளைங்க படுகிற கஷ்டத்துக்கு முன்னால, அந்தக் கஷ்டம் ஒண்ணுமே இல்ல. எங்க மண்ணை அழிக்கிற, இந்தத் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுச்சுன்னா புண்ணியமாகப்போகும்” என்றார்.

Advertisements