சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒருமுறை ஆன்லைன் முன்பதிவுக்கான கட்டணம் 30 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ‘அரசுத் துறைகளுக்கான போட்டித் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. அதன்படி, நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படும் தமிழ்நாடு மாநிலப் பணிகளுக்கு நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் 125 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சார்புப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் 100 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு சார்புப் பணிகள், அமைச்சுப் பணிகள், நீதி அமைச்சுப் பணிகள், தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி ஆகியவற்றுக்கான எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் 75 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், அனைத்துவகையான பணிகளுக்கு நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம் 75 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும் ஆன்லைன் பதிவுக்கான கட்டணம் 30 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் பட்டப் படிப்பு படித்திருந்தால், அவர்களுக்கு மூன்று முறை கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படும். கடந்த 1ஆம் தேதி முதல் கட்டண மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisements