தமிழ்நாடு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று புதன்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (8/3/17)தொடங்கி, வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்துள்ளது. இத்தேர்வுகள் காலை 9.15 மணிக்குத் தொடங்கி, நண்பகல் 12 மணி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 187 பள்ளிகளைச் சேர்ந்த 9,94,167 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களில் 4,98,383 மாணவர்களும், 4,95,784 பேர் மாணவிகளும் இந்த தேர்வை எழுதுகின்றனர். இவர்களைத் தவிர 39,741 பேர் தனித்தேர்வில் கலந்து கொள்கிறார்கள். மேலும், 224 சிறைக் கைதிகளும் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

இத்தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வின்போது எந்தவித பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 571 பள்ளிகளைச் சேர்ந்த 51,658 மாணவ – மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 209 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா தெரிவித்துள்ளார்.

கடந்த 2ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது நினைவுக்கூரத்தக்கது.

Advertisements