காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் பறவைகளின் வருகை இந்த சீசனில் 16 ஆயிரமாக குறைந்துள்ளது.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சரணாலயத்தில் நீர்க்காகங்கள், பலவித கொக்குகள், நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி உள்ளிட்ட பறவைகள் உள்ளன. இவை தவிர கூழைக்கடா, கரண்டிவாயன், பச்சைக்காலி, நத்தைக் குத்தி நாரை, ஊசிவால் வாத்து, பட்டாணி உள்ளான், சாம்பல் நிற நாரை, வர்ண நாரை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பறவைகள் ஆண்டுதோறும் வருகை தருவது வழக்கம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கனடா, சைபீரியா, வங்களாதேசம், பர்மா, ஆஸ்திரேலியா, இலங்கை முதலிய நாடுகளில் இருந்தும் வரும் பறவைகள் அக்டோபர் முதல் மார்ச் வரை இங்கு தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும்.

கடந்த 2015ஆம் ஆண்டு வரலாறு காணாத மழை, வெள்ளம் ஏற்பட்டதால் வேடந்தாங்கல் ஏரிக்கு அதிகளவில் நீர்வரத்து இருந்தது. அதனால் 2016 ஜனவரியில் வேடந்தாங்கலுக்கு 80 ஆயிரம் பறவைகள் வந்தன. ஆனால் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் வரத்து குறைந்து பறவைகள் வரத்தும் குறைந்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வன உயிரின பாதுகாவலர் கீதாஞ்சலி, ‘கடந்த ஆண்டு குறைவான மழை கிடைத்தாலும், வனத்துறை சார்பில் வேடந்தாங்கல் ஏரிக்கான வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு இருந்ததால், போதிய அளவு நீர் கிடைத்துள்ளது. அதன் காரணமாக ஓரளவு பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்து வருகின்றன.

கடந்த மாதம் எடுக்கப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் 16 ஆயிரத்து 100 ஆயிரம் பறவைகள் வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் அதிகளவில் சாம்பல் நிற நாரை, நத்தை குத்தி நாரை, சிவப்பு அரிவாள் மூக்கன், வெண் கொக்கு, நீர்காகங்கள், இராக்கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்டவை வந்துள்ளன. ஏரியில் நீர் நிறைந்திருந்தால் மட்டும் போதாது. அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகளிலும் தண்ணீர் இருக்க வேண்டும். சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயமும் நடைபெற வேண்டும். அப்போதுதான் பறவைகளுக்கு இரை கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரை பொதுமக்கள் பார்வைக்காக சரணாலயம் திறந்து வைக்கப்படும். இந்நிலையில், பறவைகள் வரத்து குறைந்துள்ளது பறவை ஆர்வலர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Advertisements