சென்னை: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொருளாளர் தீபா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொருளாளரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபா, ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட இருப்பதாகத் தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் என்று தெரிவித்த தீபா, யாருடைய ஆதரவையும் கோரவில்லை என்று தெரிவித்தார். சசிகலா குடும்பத்தினர் மற்றும் திமுக தவிர வேறு யார் ஆதரவு அளித்தாலும் அதனை ஏற்பேன் என்றும் தீபா தெரிவித்தார். ஆர்.கே.நகர் மக்கள் எம்.ஜி.ஆர். அம்மா பேரவைக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்வார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாகக் கூறிய தீபா, அரசியல் ஆதாயத்துக்காக ஜெயலலிதா மரணம் தொடர்பாக பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

Advertisements