நம் ஊர் இளைஞர்களை கவர்ந்திழுத்த அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. ஃபேன்டஸி தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸின் முதல் சீஸன் 2011 ஆம் ஆண்டு முதன்முதலில் ஒளிபரப்பட்டது. அதன் பிறகு வருடத்திற்கு ஒரு சீசன் என இதுவரை ஆறு சீசன்கள் அறுபது எபிஸோடுகளாக ஒளிபரப்பாகியுள்ளது. இந்தத் தொடரின் பிரம்மாண்ட காட்சியமைப்புகளும், சுவாரஸ்யமான கதையம்சமும் இன்னபிற சமாச்சாரங்களும் ரசிகர்களை சுண்டியிழுக்க, இப்போது அதன் அடுத்த சீசனுக்காக டிவி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நலன்கருதி அடுத்த வரவிருக்கும் சீசனை பற்றி `நறுக்’ என சில தகவல்கள்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் அடுத்த சீஸன், வரும் ஏப்ரல் மாத இறுதியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சீஸன் 17 ஏப்ரல்,2011 அன்று ஒளிபரப்பானது. அடுத்தடுத்த சீஸன்கள் 1 ஏப்ரல் 2012, 31 மார்ச் 2013, 6 ஏப்ரல் 2014, 12 ஏப்ரல் 2015 மற்றும் 24 ஏப்ரல் 2016 ஆகிய தேதிகளில் ஒளிபரப்பாகியது. எனவே, இந்த சீஸனும் ஏப்ரல் மாதத்தில், குறிப்பாக ஏப்ரல் மாத இறுதியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

இதுவரை ஒரு சீசனுக்கு பத்து எபிஸோடுகள் தான் ஒளிபரப்பட்டு வந்தன. ஆனால், அடுத்த சீஸனிலும், அதற்கடுத்து வரவிருக்கும் எட்டாவது சீஸனிலும் எபிஸோடுகளின் எண்ணிக்கை பத்தை விட குறைவு. தயாரிப்பு செலவும், படமாக்க அதிக நேரம் தேவைப்படுவதுமே இதற்கு காரணமாம். ஆகவே, கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஏழாவது சீஸனில் மொத்தம் ஏழு எபிஸோடுகள் தான் ஒளிபரப்பப்படவுள்ளன.

ஆஸ்கர் நடிகரின் என்ட்ரி :

ஏழாவது சீஸனில் அறிமுகமாகும் புதிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் ஜிம் பிராட்பெண்ட். இவர் 2001 ஆம் ஆண்டு ‘ஐரிஸ்’ எனும் படத்தில் நடித்தமைக்காக `சிறந்த குணச்சித்திர நடிகருக்கான ஆஸ்கர் விருது’ வென்றவர். இவர்தான் `ஹாரிபாட்டர்’ படங்களில் ஹொரேஸ் சலக்ஹார்ன் கதாபாத்திரத்திலும் நடித்தது.

ஏழாவது சீஸனில் பீட்டர் டின்க்லேஜ், நிக்கோலஜ் கோஸ்டர், லீனா ஹெட்டே, கிட் ஹாரிங்டன், எமிலியா கிளார்க், இந்திரா வர்மா, மெய்ஸி வில்லியம்ஸ், நத்தாலி இம்மானுவேல் ஆகியோரோடு டயானா ரிக், ஜோசஃபி கில்லன், ஜெஸ்ஸிகா ஹின்விக் என பல புதிய முகங்களும் நடிக்கவிருக்கிறார்கள்.

சீஸன் செவன் இஸ் கமிங்…

Advertisements