புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான மக்களின் அச்சத்தைப் புரிந்து கொள்ளமுடிவதாகவும், மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஒரு நல்ல முடிவு எடுக்கும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்ட நெடுவாசல் பகுதி மக்கள் 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவருகிறது. போராட்டக்காரர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தினை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் போராட்டம் நடைபெறும் நெடுவாசல் பகுதிக்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்றார். போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய அவர், அரசு சார்பாகவோ, அமைச்சராகவோ நெடுவாசலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான மக்களின் அச்சத்தைப் புரிந்துகொள்வதாகக் கூறிய அமைச்சர், மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் மத்திய அரசு திணிக்காது என்றும் பேசினார். திட்டம் தொடர்பாக நெடுவாசல் போராட்டத்தின் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தெரிவிக்கலாம் என்று கூறிய அவர், அதன்பின்னர் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.

Advertisements