சென்னை: கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே நயன்தாரா தேர்ந்தெடுத்து நடிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது அசத்தும் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, 2017-ல் இதுவரை 4 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பெரிய ஹிரோக்கள் இல்லாத, இந்த நான்கு படங்களிலும் அவரே முக்கிய கதாபாத்திரம்.

புதுமுகம் தாஸ் ராமசாமியின் இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர் அம்சம் கொண்ட டோரா திரைப்படம். நயன்தாராவை மையமாகக் கொண்ட இந்த படத்தின் டீசர் சமிபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மார்ச் மாதம் வெளியாகும் டோரா தான் இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவரும் முதல் படம். இயக்குனர் கோபியின் அறம் படத்திலும் நயன்தாராவிற்கு தான் முக்கியத்துவம். மாவட்ட ஆட்சியராக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில், அவருடன் ‘காக்கா முட்டை’ சகோதரர்கள் விக்னேஷ் – ரமேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக தயாரிக்கும் படம் கொலையுதிர் காலம். ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படத்தை பின்னணியைக் கொண்டு இப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர் வீட்டில் தனியாக இருக்கும் போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவரிடமிருந்து தப்பித்தாரா என்பது தான் ‘ஹஷ்’ திரைக்கதை. இவைதவிர, பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் நடிக்கவும் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பிரான்ஸில் உள்ள பத்திரிக்கையாளராக நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோல, பெண்களுக்கும் தன் கதாபாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும் நல்ல படங்களை மட்டும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நயன்தாரா நடிக்கிறார். இது தமிழ் திரையுலகில் பெண்கள் சார்ந்த கதைகள் அதிகம் உருவாக அடித்தளமாய் அமையும் என்று சினிமா ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

Advertisements