ராமேஸ்வரம்:  இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங் கியுள்ளார் துறவி ஒருவர்.

சுவாமி பிரணவானந்தா (71) ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். 1983-ம் ஆண்டில் இலங்கையில் நிகழ்ந்த கலவரத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி நோக்கி வந்தனர்.

அவர்களுக்கு உதவுவதற்காக இவர் ராமேசுவரத்தில் விவேகானந்தர் குடிலை நிறுவியவர். தொடர்ந்து ராமேசுவரத்தில் கடந்த 34 ஆண்டுகளாக மீனவர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருவதுடன் பல்வேறு மீனவப் போராட்டங்களை வழிநடத்தியுள்ளார்.

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையை கண்டித்து தங்கச்சிமடத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ள சுவாமி பிரணவானந்தா, பிரதமர் நரேந்திர மோடி மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தங்கச்சிமடம் போராட்டப் பந்தலிலேயே தொடங்கியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போரில் அகதிகளாக தமிழகம் வந்தர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தவர்கள் மீனவர்கள்தான். இதனால்தான் இலங்கை கடற்படையினர் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.

கடந்த ஜனவரியில் கொழும்பில் நடைபெற்ற இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையின் போதுகூட எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்வோமே தவிர காயப்படுத்தக்கூட மாட்டோம் என்று இலங்கை அரசு உத்தரவாதம் அளித்திருந்தது.

ஆனால் தற்போது இளம் மீனவரை கொலை செய்துள்ளது. உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவின் மரணத்துக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்துக்கு சிலை திறப்பதற்காக வரும் பிரதமர் மோடி உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதில் தயக்கம் காட்டுவது ஏன்? கடலில் நடைபெறும் கடைசி கொலையாக இது இருக்க வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மோடி உறுதி அளிக்கும் வரை நான் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவேன். மோடி வராமல் ஒருவேளை நான் இறந்து விட்டால் எனது உடலை மோடிக்கே அனுப்பி விடுங்கள் என்றார்.

Advertisements